Sunday, November 23, 2008

மறைபொருளில் மூலிகை மருத்துவம்


மறைபொருளில் மூலிகை மருத்துவம்

உயிர், உடல், உள்ளம் ஆகிய மூன்றும் பழுதின்றி இருத்தலே "நலம்' எனக் கொள்ளப்படுகிறது. இம்மூன்றனுள் ஏதேனும் ஒன்றில் சிறு பழுதேனும் ஏற்படுமாயின் அந்நிலை நோய் (அ) பிணி என்று வழங்கப்படுகிறது. உடற்பயிற்சி, காயகல்ப பயிற்சி, தியானம் ஆகியவை உடல், உயிர், உள்ளம் ஆகியவற்றை வலுப்படுத்துவதற்கான அதாவது, நோய் அணுகா வண்ணம் பாதுகாத்துக் கொள்வதற்கான சித்தர் எடுத்துரைத்த பயிற்சிகள் ஆகும். இவற்றை மேற்கொள்ளாது, வருகின்ற நோயை நீக்கும் முறையை மருத்துவம் என்கிறோம்.

முக்குற்றம் எனப்படும் வாதம், பித்தம், கபம் (வளி, தீ, நீர்) எனப்படும் நோய்களை வெயிலில் காய்தல், எண்ணெய் முழுக்கு, பட்டினியிருத்தல் (விரதம்), உணவு முறைகளை மாற்றியமைத்தல் போன்ற இயற்கையான எளிய முறைகளால் சித்தர்நெறியில் தீர்த்து வைத்தனர் நம் மூதாதையர். சற்று முற்றிய நோய்களைத் தாவரங்களின் பச்சிலை (இலை), தண்டு, பூ, காய், கனி, விதை, கிழங்கு, வேர், தோல், பட்டை முதலியவற்றைச் சாறு, தைலம், லேகியம், எண்ணெய், பொடி போன்ற மருந்துகளாகச் செய்து வழங்கி குணப்படுத்தினர்.

தாவரத்தை மருந்தாகப் பயன்படுத்தும் சில சித்த வைத்திய வழிகளை வீட்டுப் பெண்டிரும், வயதான மூதாட்டியரும் மற்றும் பலரும் நன்கு அறிந்திருந்ததனால் சித்த வைத்தியமானது சில வழிகளில் வீட்டு வைத்தியம், பாட்டி வைத்தியம், நாட்டு வைத்தியம் என்று பலவாறாக வழங்கப்படலாயிற்று. செவிவழி வந்த நாட்டுப்புறப் பாடல்களான தாலாட்டுகள் போன்றவற்றில் இருந்த பிள்ளை வைத்தியம், குடும்ப வைத்தியம் போன்றவை இன்று அருகி மறைந்து வருகிறது என்பது மிகவும் வருத்தத்திற்கு உரியதாகும்.

அன்றைய சித்த மருத்துவமான தமிழ் மருத்துவ மரபுகளில் அகத்திய மரபு, நந்திமரபு என இருந்திருக்க வேண்டும் என்று கருதுவர் மூலிகை மருத்துவ அறிஞர். அந்நாளில் வைத்தியர், சித்தர், யோகியர் என்று முப்பிரிவினர் மருத்துவத்தில் பங்கெடுத்தனர் என்று அறிகிறோம். மருத்துவ முறைகளைக் கற்றவர் வைத்தியர் என்றும், இவற்றோடு வாதவித்தைகளைச் செய்தவர் சித்தர் என்றும், இவற்றோடு யோகநெறிகள் கொண்டவர் யோகியர் என்றும் வழங்கப்பட்டனர்.

சித்தர்களின் எளிய பாடல்களில் பக்கவலி, கண்வலி, வயிற்று வலி, வயிற்றுப் போக்கு, கரப்பான் முதலிய நோய்களுக்கு மருந்து கூறும் முறையினைக் கண்டு மகிழ்கிறோம். அங்கே இலக்கியம் மருந்தறிவியலாக மலர்வது கண்டு மகிழ்ச்சி கொள்கிறோம். சிலவேளை மறைபொருள்களில் மருந்துகளைக் குறிப்பிடும் வழக்கமும் சித்தரிடம் உள்ளது. எடுத்துக்காட்டாக பாம்பாட்டிச் சித்தரின் பாடலொன்று

"தாசி வீடு சென்ற தறுதலைக்குச்
செம்மையாய் தருக செருப்படி தான்;
காசும் அற்றுவிடும்; கவ மிளகும்
கதியே சைவம் என்றாடு பாம்பே''

இப்பாடலின் மேற்போக்கான பொருள்: தாசி வீடு சென்ற தலைமகனைச் செம்மையாகச் செருப்பால் அடித்துத் தண்டிக்க வேண்டும். அவனால் காசு விரயமாகும். தன்மானமும் போய்விடும். ஆகவே, சைவ மார்க்கம் ஒன்றே கதியென்று ஆடாய் பாம்பே.

இப்பாடலின் மருத்துவப் பொருள்: தாசி வீடு சென்றதால் வந்த மேகவெட்டை எனும் பாலியல் நோய்க்குச் செருப்படி எனும் மூலிகை கொடுத்திட வேண்டும்; காசநோயும் கபநோயும் தணிய தாளிபத்தியம் (சைவம்) கொடுத்தால் நல்லது என்று ஆடு பாம்பே.

அத்திப் பிஞ்சு, கோவைப் பிஞ்சு, மாமரப் பட்டை, செருப்படி ஆகிய 4 மூலிகைகளையும் சம அளவில் எடுத்து வாழைப்பழச் சாறுவிட்டு, மைபோல் அரைத்து நெல்லிக்காய் அளவு சாப்பிட்டால் சீதபேதியும் ரத்த பேதியும் குணமாகும் என்ற மறை பொருளில் உள்ள தேரையர் பாடலொன்றைப் பார்க்கலாம்.


""ஆனைக் கன்றில் ஒருபிடியும் மறையன் விரோதி இளம்பிஞ்சும்
கானக் குதிரை புறத்தோலும் காலிற் பொடியை மாற்றினதும்
தாயைக் கொன்றான் சாறிட்டுத் தயவாய் அரைத்துக் கொள்வீரேல்
மானைப் பொருதும் விழியாளே! வடுகும் தமிழும் குணமாமே''

இப்பாடலில், ஆனைக்கன்று - அத்திப்பிஞ்சு; மறையன் விரோதி - கோவைப் பிஞ்சு; கானக் குதிரை - மாமரம்; காலில் பொடி - செருப்படி; தாயைக் கொன்றான் - வாழைப்பூ; வடுகு - சீதபேதி; தமிழ் - ரத்த பேதி.

சித்தர் குழூஉக்குறி முறையில் பல மருந்துப் பொருள்களுக்குப் பெயரிட்டு வழங்கினர். அவற்றுள் தாயைக் கொன்றான் என்பது ஒன்று.

"தாயைக் கொன்றானை உலர்த்தியே பொடிகள்
தான்செய்து சோறதி லிட்டாலும்
தாயகம் புரசம் பட்டையைக் கடாயம்
தான்வைத்துப் பருகிடில் தானும்
போயிடு மீளை''

என்கிறது "சரபேந்திர வைத்திய முறைகள்' எனும் நூல். வாழைப் பட்டையை உலர்த்திப் பொடி செய்து சோற்றுடன் கலந்து உண்டால், ஈளை நோய் நீங்கும்; அவ்வாறே புரசம் பட்டையைச் சிதைத்துக் கஷாயம் வைத்துப் பருகினாலும் ஈளை நோய் அகலும் என்கிறது இப்பாடல்.

"மண்ணில் வேந்தனை மாமலை யாட்டியை
உண்ணும் சோற்றுக்கு உறுதுணை யானவனைக்
கண்ணில் மூக்கில் காதில் பிழிந்திட
விண்ணுக்குச் சென்றஉயிர் மண்ணுக்கு மீளுமே''

என்ற பாடலும் மறைபொருளான மருத்துவப் பாடல்களில் ஒன்று. வெற்றிலை (மண்ணின் வேந்தன்), மிளகு (மாமலையாட்டி), உப்பு (உண்ணும் சோற்றுக்கு உறுதுணையானவன்) ஆகிய இம்மூன்றையும் கசக்கிக் கண்ணில், மூக்கில், காதில் பிழிந்திட எவ்வித பாம்பின் நஞ்சும் இறங்கும் என்பது இப்பாடலின் பொருள்.



தும்பிக்கையுடைய தந்திமுக விநாயகன் திருமேனியில் பூச் சொரிந்து அவனுடைய திருவடிகளைத் தவறாது பணிவோர்க்கு வாக்குவன்மை, மனநலம் உண்டாகும்; தாமரைச் செல்வியாம் திருமகளின் அருள்நோக்கு கிட்டும்; உடல் நலம் வாடாது வாடாது என்ற கருத்தினைத் தமது "வாக்குண்டாம்' என்ற நூலில்

"வாக்குண்டாம் நல்ல மணமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி றுடங்காது - பூக்கொண்டு
துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு''

என்று தும்பிக்கையான் துதியாக ஓதுகிறார் ஔவைப் பிராட்டியார்.

இதன் உட்கருத்தை உற்று நோக்கினால் பஞ்சபூத மூலிகைகளைப் பார்க்கலாம். தாமரை மலர் (பூ), குப்பைமேனி (மேனி), செருப்படை (தும்பி), கையான்தகரை (கையான் - கரிசலாங்கண்ணி), செருப்படை (பாதம்) ஆகிய ஐந்து மூலிகைகளைத் தவறாமல் சார்ந்திருப்போர்க்கு வாக்குவன்மை, மனநலம் கிட்டுவதோடு லட்சுமியின் கடாட்சமும் கிட்டும்; உடல் வாடாது, நரை திரை, மூப்பு அணுகாத இளமையுடன் என்றும் வாழலாம் என்ற அரிய பொருள் தருகிறது இப்பாடல்.

தாமரையின் 50% தாமிரச் சத்து, கரிசலாங்கண்ணியில் இரும்புச் சத்து, செருப்படையில் ஈயச்சத்து உள்ளன என்பது தாவரவியல் தரும் உண்மை.

முன்னாளில் திண்ணைப் பள்ளி, குருகுலம் போன்ற கல்விச் சாலைகளில் நாட்டு மருத்துவமும் ஒரு பாடமாக இருந்து வந்தது என்றும், பின்னர் அது உயர்நிலைப் பள்ளிகளிலும் ஒரு பாடமாக்கப்பட்டது என்றும் கூறுவர். ஒரு வருந்தத்தக்க செய்தி யாதெனில் அன்று பாடமாகச் சேர்க்கப்பட்ட சித்த வைத்தியமானது இன்று உயர்நிலைப் பள்ளியினின்றும் எடுக்கப்பட்டுவிட்டது என்பதே!

சித்தர் வழியில் நம் மூதாதையர் வகுத்த மருத்துவ நெறிகளானவை இன்று கையாளப்படாத காரணத்தினாலும், அவற்றிற்கான விளக்கங்களை எடுத்து இயம்புவோர் இல்லாமையாலும், அவற்றை ஆய்வு செய்து வெளியிட அறிஞர் பலர் முன் வராமையாலும், அவை நாட்பட நாட்படமறைந்து வருவதாலும், நோய் அணுகா நெறியை இன்றைய மக்கள் கடைப்பிடிக்காததாலும், இன்றைய நாள் பிணிகள் பல பெருகி வருகின்றன. ஏமக்குறைவு எனப்படும் எய்ட்ஸ் போன்ற புதுப்பிணிகள் உருவாகி வருகின்றன.

ஆங்கில மருத்துவத்திற்கு அடிக்கல் நாட்டியது நம் சித்த வைத்தியம் சர்ப்ப கந்தியிலிருந்து (கீச்த....) சர்பாசில்ப் (உதிர அழுத்த நோய்க்கான மருந்து), சோமவல்லியிலிருந்து எபிடிரின் (ஆஸ்த்துமாவிற்குத் தற்காலிகப் பயன்தரும் மருந்து), வள்ளிக் கிழங்கிலிருந்து கோர்ட்டிசோன் எனும் மயக்க மருந்து போன்ற பல அரிய மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.

"கீரைத்தோட்டம் என் மருந்துப் பொடி' என்பார் மருத்துவ அறிஞர் டால்ஸ்டாய் என்பவர். இது இலை வகிக்கும் தலைமைக்கு ஓர் எடுத்துக்காட்டு.

எனவே சித்தரின் மருத்துப் பாடல்களை, குறிப்பாக மறைபொருளில் இலங்கும் மருந்துகளை ஆய்வு செய்தால் பல உண்மைகள் தெரியவரும்; நன்மைகளும் ஏற்படும்.

Tuesday, April 8, 2008

தமிழ் மருத்துவ இலக்கிய ஆவணத்துறை & ஆய்வுத்துறை நிறுவுதல்

“தமிழில் மருத்துவ இலக்கியங்கள்” என்னும் புதிய வடிவங்களை, ஆய்வு செய்த வேளையில், “இந்திய மருத்துவ அறிவியல், கணிதம், வானவியல் போன்ற மரபுகளுக்கெல்லாம் ஆதாரமாகத், ‘தமிழ் மரபு’ விளங்குகின்றது! என்பதை நிறுவ கிடைக்கப்பெறும் ஆவணச் சான்றுகளைத் தங்கள் பார்வைக்குக் கொண்டுவர விழைகின்றேன்.

தமிழ் மருத்துவத்தின் வளர்ச்சி, தமிழ் மருத்துவத்தின் பாதுகாப்பு ஆகியவற்றுக்குரிய சிறப்பு நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன. தற்போதுள்ள தமிழ் மருத்துவத்தின் துறைப்பணிகளை விரிவுபடுத்த வேண்டும் என்பது எனது பரிந்துரையாகும்.

தமிழ் மருத்துவம், பண்டைய காலத்திலிருந்தே நடைமுறையில் இருந்து வந்துள்ளது. பழந்தமிழ் மருத்துவப் பாடல்கள் ஒரு சில கிடைத்தாலும் அதன் மருத்துவ நூல்கள் கிடைத்தில. சங்க காலத்து ‘கலைக்கோட்டுத் தண்டார்’ என்னும் முனிவர் இயற்றிய ஒரு இலட்சம் பாடல்களைக் கொண்ட நூல் இருந்ததற்கான சான்றும், அந்நூல் ஜெர்மனி நாட்டிற்குக் கொண்டு செல்லப் பட்டுள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு, தமிழ் மருத்துவச் சுவடிகளும் தமிழ் இலக்கியச் சுவடிகளும் சுமார் 87 நாடுகளின் நூலகங்களில் இருப்பதாக, உலக நாடுகளின் நூலக ஆய்வு தெரிவிக்கிறது.

மருத்துவ நூல் உரையாசிரியர்கள் மேற்கோளுக்காக எடுத்தாண்டுள்ள இடைக்காடர் மருத்துவம், அகத்தியர் - 81 000, அகத்தியர் – 51 000, அகத்தியர் 30 000, அகத்தியர் 21 000, அகத்தியர் 18 000, அகத்தியர் 8 000, பரஞ்சோதி 8 000, கோரக்கர் வெண்பா, மச்சமுனி கலிப்பா, சங்கரமுனி கிரந்தம், மாபுராணம் போன்றவை தமிழ் மருத்துவத்துக்கு ஆதாரமாக இருந்துள்ளன. இது, மேற்கோளுக்காகக் எடுத்துக் காட்டப்பட்டுள்ள பாடல்களினால் தெரியவருகிறது.

தமிழ் மருத்துவ மரபைத் தோற்றுவித்தவர் எனக் கருத்தப்பெறும் திருமூலர் இயற்றிய ‘எண்ணாயிரம்’ என்னும் நூலின் அருமையை வடலூர் வள்ளலார் போற்றுகிறார். தருமையாபுர ஆதினத்தின் சுவடி நூலகத்தில் ‘எண்ணாயிரம்’ என்னும் நூல் இருந்ததைக் கண்டதாக, உ.வே.சா. குறிப்பெழுதியுள்ளார்.

கி.பி. 7 ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 17 ஆம் நூற்றாண்டு வரையிலான காலங்களில் ஒரு இலட்சம் பாடல்களைக் கொண்ட மருத்துவ நூல்கள் சமஸ்கிருதத்திற்கும் மங்கோலியம், திபெத்தியம், அரபி, மலையாளம், தெலுங்கு, மராத்தி போன்ற மொழிகளுக்குச் சென்றுள்ளன. அவை, இன்றும் தமிழ் நூல்களாகவே வழங்கியும் வருகின்றன.

வடக்கிலுள்ள நாலந்தா பல்கலைக் கழகம், ஆயுர் வேத பல்கலைக் கழகம், சமஸ்கிருத கல்லூரிகள், கேரளாவில் வழங்கி வருகின்ற ஆயுர் வேத கல்லூரி ஆகியவற்றில் வழங்கி வருகின்ற மருத்துவ நூல்களில் செம்பாதி தமிழ் நூல்கள் என்பது குறிப்பிடத் தக்கது. வடமொழியிலுள்ள இரச சாஸ்திரம், இராவணன் நூலகத்திலிருந்து கொண்டு வரப்பெற்ற நூலைப் பார்த்து எழுதியதாகத் தெரிவிக்கிறது.

கி.பி. 10 ஆம் நூற்றாண்டளவில் குமரி, திருவனந்தபுரம் பகுதியில் வழங்கி வந்துள்ள ‘சிந்தாமணி மருத்துவம்’ என்னும் ‘இராவணன் மருத்துவ நூல்கள்’ அனைத்தும் திருவிதாங்கூர் மன்னரின் தூண்டுதலினால் திரட்டப் பட்டுள்ளன. அவை, நொய்யாற்றங்கரை என்னும் ஊரில் நிறுவப்பட்டிருந்த ‘தமிழ் மருத்துவ ஆய்வு மையம்’ என்னும் அமைப்பின் மருத்துவர்களும் வர்ம ஆசான்களும் அகத்தியர் பெயரில் மலையாள மொழியில் மொழிமாற்றம் செய்துள்ளனர்.

அந்நூல்களின் உதவியினால் உருவாக்கப் பட்டதே ‘ஆயுர் வேத மருத்துவம்’ ஆகும்.
இராவணன் இயற்றிய நூல்கள் என அறியப்பட்டுள்ள நூல்கள் விபரம் வருமாறு:-

1. உடற்கூறு நூல்
2. மலை வாகடம்
3. மாதர் மருத்துவம்
4. இராவணன் – 12000
5. நாடி, எண்வகை பரிசோதனை நூல்
6. இராவணன் வைத்திய சிந்தாமணி
7. இராவணன் மருந்துகள் - 12000
8. இராவணன் நோய் நிதானம் - 72 000
9. இராவணன் – கியாழங்கள் – 7000
10. இராவணன் வாலை வாகடம் – 40000
11. இராவணன் வர்ம ஆதி நூல்
12. வர்ம திறவுகோல் நூல்கள்
13. யாழ்பாணம் – மூலிகை அகராதி
14. யாழ்பாணன் – பொது அகராதி
15. பெரிய மாட்டு வாகடம்
16. நச்சு மருத்துவம்
17. அகால மரண நூல்
18. உடல் தொழில் நூல்
19. தத்துவ விளக்க நூல்
20. இராவணன் பொது மருத்துவம்
21. இராவணன் சுகாதார மருத்துவம்
22. இராவணன் திராவக தீநீர் நூல் – அர்க்க பிரகாசம்
23. இராவணன் அறுவை மருத்துவம் – 6000
24. இராவணன் பொருட்பண்பு நூல்
25. பாண்ட புதையல் முறைகள் – 600
26. இராவணன் வில்லை வாகடம்
27. இராவணன் மெழுகு வாகடம்

என்பன.

மேற்காணும் நூல்களில் பல, சங்கரன் கோயில் அருகிலுள்ள ‘கரிவலம் வந்த நல்லூர்’ என்னும் ஊரில் அமைந்துள்ள ‘பால் வண்ண நாதன்’ திருக்கோயிலில் கருவூலமாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இராவணன் நூல்களில் ஒன்றான “இராவணன் திராவக தீநீர்” என்னும் நூல், அர்க்க பிரகாசம் என்னும் பெயரில் மலையாளத்தில், சுமார் 180 ஆண்டுகளுக்கு முன் வெளியாகியிருக்கிறது. (அந்நூல் என்னிடம் இருக்கிறது)

“இருபதாம் நூற்றாண்டின் ஈழத்து சித்த மருத்துவம்” (திசம்பர் 2000)
ஆசிரியர். Dr. சே.சண்முகராஜா M.D. (Siddha)
சித்த மருத்துவ வளர்ச்சிக் கழகம்,
கந்தரோடை, சுன்னாகம், இலங்கை.

என்னும் நூல், சித்த மருத்துவத்தின் தாயகமாக இலங்கையில் யாழ்ப்பாணம் விளங்குகிறது என்றும், இராவணன் இயற்றிய நூல்கள் நமக்குக் கிடைக்கவில்லை என்றும், சிங்கள மொழியில், இராவணன் இயற்றிய நூல்களில் சில வழக்கில் இருந்து வருகிறது! என்றும் குறிப்பிடுகிறது. மேலும், 15 ஆம் நூற்றாண்டளவில் சிங்களத்தில் ஆக்கப்பட்ட “வைத்திய சிந்தாமணி பைசாஜ்ஜ சங்கிரகம்” (Vaidya Cintamani Bhaisadya Sangrahava) என்னும் சிங்கள மருத்துவ நூல், இராவணன் வைத்திய சிந்தாமணி என்னும் தமிழ் மருத்துவ நூலைத் தழுவி எழுதப்பட்டதாகும்! என்றும் குறிப்பிடுகிறது.

இந்தியில் “இராவண சம்ஹிதா” என்னும் மருத்துவ நூல் இராவணன் படத்துடன், மனோஷ் பப்ளிகேஷன், புதுதில்லி – 110084 லிருந்து வெளிவந்துள்ளது. அது, சுமார் 830 பக்கங்களைக் கொண்டதாக இருக்கிறது.

தமிழில் வழங்கி வந்துள்ள சங்க இலக்கியங்கள், காப்பியங்கள் போன்றவை உ.வே.சா. போன்றவர்களால் சேகரிக்கப் பட்டன. ஆனால், மருத்துவக் கலைநூல், 64 வகை கலை நூல்கள், நிகண்டு, வானியல், கணிதம், வர்ம நூல்களும் சேகரிக்கப் படவில்லை.
விலங்கு, பறவை மருத்துவம், மருத்துவம் சார்ந்த அறிவியல் சுவடி நூல்கள் திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகர்கோயில், திருவனந்தபுரம் அதனைச் சார்ந்த பகுதிகளிலும் மிகுதியாக இருக்கின்றன.

மைய அரசின் பண்பாட்டுத் துறையின் தேசிய ஓலைச் சுவடிகள் மையமும் தமிழ் நாடு அரசும் இணைந்து நட்த்திய கணக்கெடுப்பில் (பிப்ரவரி, 2006) நெல்லை மாவட்டத்தில் மட்டும் இரண்டு இலட்சம் சுவடிகள் இருப்பதாக்க் கண்டறியப்பட்டுள்ளது. சங்கரன் கோயில் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் முப்பதாயிரம் சுவடிகள் இருப்பதாக அறியப்பட்டுள்ளது.

இன்றைய நிலையில் தமிழ் மருத்துவ முறைகள் ஓலைகளிலும் பிற மொழிகளிலும் மறைந்து கிடக்கின்றன என்பது குறிப்பிடத் தக்கது.

தமிழ் மருத்துவம் சிறப்படையவும், தமிழ்க் களஞ்சியத்தை மீட்டெடுக்கவும் வேண்டும். அதற்குக் கீழ்க்காணும் பணிகளைச் செயலாக்க வேண்டும்.

1. தமிழகத்திலுள்ள தமிழ் மருத்துவச் சுவடிகளைத் திரட்டும் பணியை மேற்கொண்டு, அவற்றை ஆவணப் படுத்திப் பட்டியலிட வேண்டும்.
2. அரிய நூல்களைப் பதிப்பித்து உரையுடன் வெளியிட வேண்டும்.
3. தமிழகத்திலும் இலங்கையிலுமுள்ள இராவணன் நூல்களைத் திரட்டி வெளியிட வேண்டும்.
4. பிற மொழிகளிலும் பிற நாடுகளிலும் உள்ள மருத்துவ நூல்களைப் படியெடுக்க முயற்சி செய்ய வேண்டும்.
5. பரம்பரை மருத்துவர்களிடமுள்ள எழுத்து வடிவம் பெறாத மருத்துவ முறைகள், மலைசாதி வகுப்பினரிடமுள்ள மருத்துவ முறைகள் ஆகியவற்றைக் கண்டறிந்து திரட்ட வேண்டும்.

மேற்காணும் பணிகள் அனைத்தும் செம்மையாக நடைபெற, தமிழ் மொழிக்கு வலுவூட்ட “ தமிழ் மருத்துவ இலக்கிய ஆவணத்துறை & ஆய்வுத்துறை “ நிறுவிட வேண்டுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

Tuesday, September 4, 2007

தமிழில் மருத்துவ இலக்கியங்கள் - ஓர் ஆய்வு



ஆர். பார்த்தசாரதி


சென்னைப் பல்கலைக் கழக முனைவர் பட்டத்துக்காகப் புலவர் இர. வாசுதேவன் எழுதிய ஆய்வுரை இந்நூல்.

தொடக்கத்திலேயே ஓருண்மையை எடுத்துச் சொல்ல வேண்டும். அதாவது தமிழ் மருத்துவம் எனக் கருதப்படும் சித்த மருத்துவம் பற்றிய இலக்கியங்கள் குறித்த ஆய்வு என்பதோடு மட்டுமமையாமல் சித்த மருத்துவத்தின் பல்வேறு கூறுகளை இந்நூல் விளக்குகிறது. பல வகைகளில் இதனை இருபத்து ஓராம் நூற்றாண்டில் எழுந்த சித்தமருத்துவ முதல் நூல் எனக் கருதலாம்.

தமிழில் "சித்தர்" என்னும் சொல் ஏறத்தாழ 15 நூற்றாண்டுகளாக வழக்கில் இருந்து வந்துள்ளது. சித்தர் என்ற சொல்லுக்கு இயற்கை இகந்த செயல்பாடு, அற்புதம், மனநிறைவு, திடமனம் எனப் பல பொருள் உண்டு. அதாவது மனிதன் புறத்தே உள்ள பொருள்களை மட்டுமல்லாமல் தன் அகத்தே உள்ள மனத்தையும் அடக்கிக் கட்டுப்படுத்தி, மனித சக்திக்கு அப்பாற் பட்ட செயல்களைச் செய்து முடிப்பவர். தமிழில் "அபிதான சிந்தாமணி" கூறுவது போல முதலில் நவசித்தர்கள் இருந்தார்கள். பின்பு பதினெட்டு சித்தர்கள் ஆனார்கள். காலப் போக்கில் நூற்றுக்கணக்கானோர் சேர்க்கப்பட்டனர். இராமலிங்கர், மகாகவி பாரதியாரும் சித்தர் எனக் கருதப் பெற்றனர்.

தமிழகத்தில் கதிரவனின் ஒளிக்கற்றைகள் புகமுடியாத மலைகளில், குகைகளில், கானகங்களில் சித்தர்கள் வாழ்ந்திருந்ததாக தவமிருந்ததாக நம்பப்படுகிறது. எனவே பொதுவாகச் "சித்தர்கணம்" என்னும் சொல்லாட்சி தமிழில் இடம்பெற்றது. வித்தகச் சித்தர் கணத்துக்கு வாய்த்த அளப்பரிய வலிமை பற்றித் தாயுமானவர் பல பாடல்களில் எடுத்துச் சொல்லியுள்ளார்.

சித்தர் எனப்படுவோர் இந்திய நாடு கண்ட சமணம், பௌத்தம், சைவம் என்னும் சமயங்களில் சிறப்பான இடம் பெற்றுள்ளனர். புத்தர் "சித்தர்" எனப்பட்டார். சமண சமயத்தில் துறவில் மிக உயர்ந்த நிலை அடைந்தவர்களைச் சித்தர், ஆரூகதர்கள், பரமேட்டிகள் என்றனர். சைவத்தில் சிவனைச் சித்தன் எனக் குறிப்பிடுவதும் உண்டு. எனவே "சித்தர் சிந்தனை" இந்தியர், தமிழர்களுக்குப் பொதுவானது எனலாம். இதற்கு நிகராக இஸ்லாமில் சூபி இயக்கமும் கிருத்துவத்தில் மெய்ஞானிகளும் இருந்ததாகக் கூறுவர்.

சித்தர்கள் நம் நாட்டில் குறிப்பாக, தமிழகத்தைப் பொறுத்தவரை மூவகையாகப் பிரித்து பார்க்கப்படுகின்றனர். முதலாவதாக, இறை நம்பிக்கையில் ஊறித் திளைத்து மனநிறைவு பெற்றவர்கள். இரண்டாவதாக சித்தத்தைச் சிவன் பால் செலுத்திய போதிலும் இயற்கையை எதிர்த்துப் போராடி இயற்கையை வசப்படுத்தி மனித சமூகத்தின் நல்வாழ்வுக்காக இயற்கைப் பொருள்களைப் பயன்படுத்தியவர்கள். மூன்றாவது இயற்கையை எதிர்த்துப் போராடும் போது கடவுள் நம்பிக்கையில் ஈடுபடாது பொருள் முதல்வாதிகளாக இலங்கியவர்கள்.

இம்முப்பிரிவுகளிலும் மருத்துவர்கள் உண்டு. இந்தப் பாகுபாட்டினை மிக விரிவாக ஆராய்ந்து விளக்கமாக எடுத்துக் கூறுவது இந்நூல். மரபு வழிப்பட்ட இறுக்கமான வைணவமும், சைவமும் அதாவது விசிட்டாத்வைதமும் சைவச்சித்தாந்தமும் சித்தர்களை ஏற்றுக் கொண்டதில்லை. வைதிக சமயங்கள் இவர்களைப் புறத்தவர்களாக, மரபு வழுவியவர்களாக ஒதுக்கி வைத்து வந்துள்ளன. இருப்பினும், புத்தசமயம் வைதிக சமயங்களை ஊடுருவியதோடு அவை மக்களிடையே செல்வாக்குக்குப் பெறச் "சித்த சிந்தனை உணர்வு" காரணம் என்னும் உண்மையைப் பல கோணங்களிலிருந்தும், பல நிலைகளிலிருந்தும் ஆராய்ந்து ஆசிரியர் நிலை நாட்டுவது பாராட்டத்தக்கது.

உலகாயதம் எவ்வாறு சாதாரண மக்களுடைய நல்வாழ்வுக்குத் தேவையான வேளாண்மை அரசமைவு, மக்களாட்சி என்னும் ஜனநாயக மரபுகள் வளரத் துணை செய்ததோ அது போலவே சித்த மருத்துவமும் மக்களுடைய நல்வாழ்வுக்காக அரும்பணியாற்றி வந்துள்ளது. பல்லவர், சோழர் காலத்தில் இருந்த ஏராளமான கல்வெட்டுகள் இதனை மிகச் சிறப்பாக எடுத்துச் சொல்கின்றன என்பதனைக் காட்டுகிறார்.

குறிப்பாக "அகத்தியர், பரிபூரணம்" என்னும் மருத்துவ நூல், சித்த மருத்துவம் மேலோர், கீழோர், செல்வர் - வறியவர் என்னும் சமூக வேற்றுமைகளை, குறிப்பாக நால்வருணப் பாகுபாட்டைப் புறம் தள்ளிப் பாமரமக்களுக்காகச் சித்த மருத்துவம் நடைமுறைப் படுத்தப்பட்டது என்பதையும் செல்வர் பணம் கொடுத்து மருத்துவம் செய்து கொள்ளும் வசதி படைத்தவர்கள், ஆனால் கீழ்த்தட்டு மக்கள் வறிய நிலையில் இருப்பதால் அவர்களுக்குச் சித்த மருத்துவம் முக்கியத்துவம் தர வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறது. இந்த நோக்கத்தின் அடிப்படையை உணர்த்தும் பொருட்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பக்கந்தோறும் அரிய செய்திகளும், விவரங்களும் விளக்கங்களும் இடம் பெற்றுள்ளன.

மருத்துவத்தின் தேவை சித்த மருத்துவத்தின் சிறப்பு, உடல்நலம் பேண அடிப்படைத் தேவைகள், நோயற்ற வாழ்வு, நோய்வரின் நோய்நாடி, அதுதணிக்கும் வாய் நாடிச் செய்ய வேண்டிய மருத்துவம், உணவே மருத்துவம், மருந்தே உணவு என்னும் கோட்பாடு, தாவரங்களும் உயிரினங்களும் உலோகங்களும் அதாவது பஞ்ச பூதங்கள் எல்லாம் மனித நலன்களுக்காகப் பயன்படுமாற்றல் ஆகிய எல்லாவற்றையும் மிக அருமையாகத் திரட்டித் தந்துள்ளார் ஆசிரியர்.

சித்த மருத்துவம் எப்படித் தமிழ் நாட்டில் வளர்ந்து வந்துள்ளது என்பதையும் முரண்பாடுகள் - அறுசுவை உணவு, நட்பு, பகை என்பனவற்றையும் அதாவது பொருளை முதலாவதாகக் காணும் கோட்பாட்டில் உணவே மருந்து - மருந்தே உணவு என்னும் அடிப்படையில் பல செய்திகளை நூல் எடுத்துச் சொல்லுகிறது. பல்லவர் காலம் தொடங்கி விஜயநகர மன்னர் காலம்வரை அன்று நிலைத்திருந்த அரசுகள் சித்த மருத்துவத்தை ஊக்குவித்துப் பராமரித்து வந்ததைக் கல்வெட்டு சான்றுகளுடன் நிறுவுவதோடு தஞ்சை மராட்டிய வேந்தரான சரபோஜி வைத்திய நூல்கள் திரட்டுவதற்காக எடுத்து கொண்ட முயற்சிகளைச் சிறப்பாக எடுத்துச் சொல்லுகிறார். மரணமிலாப் பெருவாழ்வு திருமூலர் காலம் தொடங்கி இராமலிங்க அடிகளார் காலம் வரை பேசப்பட்டு வந்துள்ளது. சித்த மருத்துவத்தை எவ்வாறு நோக்க வேண்டும் என்பதனைத் தமிழிலுள்ள சித்த மருத்துவ நூல்கள் துணையுடன் ஆசிரியர் சுவைப்பட எடுத்துச் சொல்லியுள்ளார்.

ஐம்பூதங்களை மருந்தாக மாற்றுதல், நாடி வழி வாதம் பித்தம், ஐயம், நோய் தேர்வு செய்தல், வாயுக்கள் தாதுக்கள் இடையே உள்ள தாக்குறவு, நாடி நோய்க்குறிகளை காட்டும் முறைமை, மருத்துவத்தில் சுவை பெறும் நிலைமை, மருந்துத்தேர்வு, உறுப்புகளும் அவற்றுக்கான தனி மருந்துகளும், நிலத்தையொட்டிய பாத்திரங்கள், நோய் நீராடல், உண்கலம், நோய், ஆடை, அகமருந்து, புறமருந்து, அவை செய்யும் முறை என்பன பற்றியெல்லாம் ஆசிரியர் ஆய்ந்து தரும் உண்மைகள்-இன்று வாழும் மக்களுக்கும் தேவைப்படும் செய்திகள் ஆகும். எடுத்துக்காட்டாக இரத்தத்தை உண்டாக்கத் துவர்ப்பு, எலும்பை வளர்க்க உப்பு, தசையை வளர்க்க இனிப்பு, கொழுப்பை உண்டாக்கப் புளிப்பு, நரம்பை வலுவாக்கக் கசப்பு, சுரப்பிகளைச் சீராக்கக் காரம் தேவை என்பன போன்ற செய்திகளை விரிவாகக் கூறியுள்ளார். இத்தகைய பகுப்பாய்வு இன்றைய பல்வேறு பல் மருத்துவ முறைகளிலும் ஏற்கப்பட்டு வருகிறது.

நஞ்சையும் மருந்தாக்குவது சித்த மருத்துவம். மூலிகைகள், அவற்றின் சிறப்பு, மருத்துவப் பயன்கள், மருந்து செய்தல், புடம் போடுதலின் சிறப்பு, அதற்காகப் பயன்படுத்தப்படும் எரிபொருள்கள், எரிபொருள்களால் செய்யப்படும் மருந்துகள், மருந்து வகைகள், அவை பயன்படும் காலம் (வயது) என்பன பற்றியெல்லாம் தெளிவாக ஆசிரியர் எடுத்துக்கூறுகிறார். பல சித்த மருத்துவ நூல்கள் கூறும் செய்திகள் பல இந்த நூலில் சுருக்கமாக எடுத்துக் கூறப்படுகின்றன. இது பாராட்டப் படவேண்டியதாகும். நூலின் சிறப்பான பகுதி சித்தர்கள் மனித சமுதாய நலன் மேம்பட ஆற்றிய தொண்டு பணி பற்றியதாகும். சித்த மருத்துவத்தில் பரிணாம வளர்ச்சி - காலம் தோறும் படிப்படியாக அது வளர்ந்தடைந்த நிலைமையைத் திருமூலர் காலம் முதல் இன்றளவும் அவை பெற்ற மாற்றங்கள் உள்ளிட பல செய்திகளை விரிவாக எடுத்துக் கூறுகிறது. தமிழ் இலக்கியத்தில் சித்தர் நெறி பெறும் பங்கு - சித்துகளின் எண்ணிக்கை எண்ணிலடங்கா, அதாவது, இயற்கை கடந்த செயல் தன்மையாலும், இடத்தாலும் வேறுபடுவதால் கணக்கிட்டுச் சொல்ல முடியாது என்பதனை இலக்கியச் சான்றுகளுடன் நிறுவ முற்படுகிறார்.

மரணமில்லாப் பெருவாழ்வை வலியுறுத்தும் சித்த மருத்துவம் செத்தாரை எழுப்புதல் பற்றியும் கூறுகிறது. அதே போது வாழ்க்கையில் கண்டறிந்த உண்மைகளைத் தெளிவாக எடுத்துச் சொல்லும் சித்தர்கள் சாதி, சமயம் கடந்தவர்கள் உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தவர்கள். சித்தர்கள் வகுத்த நெறி வேதங்கள் ஆகா. மக்களுக்கான நல்வாழ்வு, இலக்கியம், ஆனால் பல இடங்களில் சங்கேதச் சொற்களைப் பயன்படுத்தும் இலக்கியம் என்பதனைத் தெளிவுபட எடுத்துக் கூறுகிறார். வரலாற்று அடிப்படையில் நோக்குவோமானால், சித்த மருத்துவம் அடித்தட்டு மக்களுடைய தொழிலாக, பணியாக இருந்து வந்துள்ள பான்மையை அறியலாம். அலோபதி முறை மேல் தட்டு மக்களுக்கு மட்டுமே பெரும் வாய்ப்புத் தருவதாக வளர்ந்து வந்துள்ளது. ஆனால் உலக மயமாக்கல் என்னும் புதிய பொருளாதாரக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டால் சித்த மருத்துவ நோக்கமும் தன்மையும் மாறிவிடுவதற்கான வாய்ப்புண்டு. இது தவிர்க்கப்பட வேண்டும்.

கடந்த நூற்றாண்டில் சாம்பசிவம் பிள்ளை என்னும் அறிஞர் தொகுத்த சித்த மருத்துவக் களஞ்சியம் முன்னோடி நூல், முனைவர் வாசுதேவன் படைத்துள்ள இவ்வாய்வு நூல் வரும் தலைமுறையினருக்கு அறிவுக் கருவூலமாகச் சித்த மருத்துவர்க்கும் மாணாக்கர்களுக்கும் வழிகாட்டியாக அமையும்.
வாசகர்களுக்கு இவ் உண்மை புலனாகும்.

தமிழில் மருத்துவ இலக்கியங்கள்
- ஓர் ஆய்வு

ஆசிரியர் : முனைவர் இர. வாசுதேவன்,
வெளியீடு : பூங்கொடி பதிப்பகம்,
14, சித்திரைக்குளம் மேற்கு வீதி, மயிலாப்பூர்,
சென்னை - 4, விலை : ரூ. 240.00

--
இருக்கும் வரை தமிழ் அணையில்
அன்புடன்
இரவா

http://thamizmandram.blogspot.com/
www.thamizhkkuil.net
--~--~---------~--~----~------------~-------~--~----~
இருந்தமிழே உன்னால் இருந்தோம்! இமையோர்,
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டோம்!
-~----------~----~----~----~------~----~------~--~---

திருக்குறள் தெளிவு

"மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உனின்" - 942.

உரையாசிரியர்கள் கீழ்க் கண்டவாறு பொருள் கூறுகின்றனர் .

ஒருவன் முன் உண்டது அற்றபடியைக் குறிகளால் தெளிய அறிந்து பின் உண்ணுமாயின் அவன் யாக்கைக்கு மருந்து என வேண்டாவாம் .
- பரிமேலழகர்.

யாக்கைக்கு மருந்தென்பது ஒன்று வேண்டா . குற்றமற முகாலத்து அருந்திய உணவு அற்றமை அறிந்து பாதுகாத்து உண்பானாயின்.
- மணக்குடவர்.

மருந்தொன்றும் வேண்டாவாம் உடம்பிற்கு , முற்காலத்து அருந்திய உணவு அற்றமையறிந்து நுகர்வது பாதுகாத்து நுகர்வானாயின்.
- பரிப்பெருமாள்.

செரித்தால் சாமம் பார்த்து அன்னம் இரண்டு கூறும் தண்ணீர் ஒரு கூறும் வாயு சஞ்சரிக்க ஒரு கூறும் வாத பித்த சிலேட்டுமத்திற்கு வேண்டாக் கறியை விட்டு அசனம் பண்ணக் கடவன் .

- பரிதியார்.

தாம் அங்ஙனம் உண்பது இங்ஙனம் அற்றமை குறிக்கொண்டு ஒழுகப் பெறின் ,உறுவதோர் நோயின்மை தமது யாக்கைக்கு; இனி, வேறு மருந்தொன்று நாவினால் சொல்லும் வேண்டாதாய் விடும்.
- காலிங்கர்.

அருந்தியது அற்றது எனத் திருவள்ளுவர் கூறியதிலிருந்து நாம் முன் உண்ட உணவு உடலுக்குப் பயன்பட்ட பின்னர் உடலை விட்டு நீங்கிய தன்மையையே உணர்த்துகிறார் .
- எல். இராமசாமி, திருக்குறளில் மருந்து. குறள் - 2.

ஒருவன் தான் முன்னுண்டது செரித்ததைக் குறிகளால் தெளிவாக அறிந்து அதன்பின் உண்பானாயின் , அவனுடம்பிற்கு மருந்தென ஒன்றுந் தேவையில்லை.
- பாவாணர்.


ஆய்வு :

இக்குறளுக்கு உரையியற்றிய உரையாசிரியர்கள் யாரும் மருந்தை ,அருத்துவத்தை அறிந்து உரையியற்றியதாகத் தெரியவில்லை. காரணம், அருந்தியது என்னும் சொல்லுக்குரிய பொருளை அறியாமல், அருந்தியது என்பதற்கு உண்டது என்று பொருள் கொண்டுள்ளனர். அதனால், திருவள்ளுவர் கூற எண்ணிய பொருள் அறியப்பெறாமல் போயிற்று.

எவ்வாறென்றால் , உண்பது, திட உணவு . அருந்துவது, திரவ உணவு . அருந்தியது என்பது திட உணவைக் குறிக்காது . திரவ உணவையே குறிக்கும்.

திரவ உணவுகளில் அற்றுப் போகும் அளவிற்குச் செரிக்கும் உணவாக இருப்பது எது ?

"துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉ மழை".

உண்பார்க்கு நல்ல உணவுகளை உளவாக்கி , அவற்றை உண்பார்க்குத் தானும் உணவாய் நிற்பதும் மழை. என்றதனால், நீர், அனைத்து உயிரினங்களுக்கும் வேண்டிய உணவுவகைகளை உண்டாக்கும். நீரே உணவாகவும் ஆகும் என்று பெறப்படுகிறது.

குறள் , அருந்தியது என்று குறிப்பிடுவது நீர் உணவையே எனலாம். எவ்வாறென்றால், நீர் மட்டுமே உண்ட பின்பு உடலில் தங்காமல் முழுவதும் அற்றுப் போகும் அளவிற்குச் செரிக்கும் தன்மை கொண்டது .

நீர் உணவு வகைகளாகிய பால் , பழச்சாறு போன்றவை, சத்துப் பொருள்களை உடலில் விட்டுவிட்டு சக்கைப்பொருள்களை வெளியேற்றும் என்பதால், அவற்றை அற்றவை என்று குறிப்பிடார்.

நீரை உணவாக உண்டால் அது எவ்வாறு நோய்களைப் போக்கி ,உடம்புக்கு மருந்து என்பதே வேண்டாதவாறு எப்படிச் செய்யும்?

செய்யும் என்கிறது , தமிழ் மருத்துவமும், எண்வகை ஓகமும்.

நீர் உணவு முறை

அதாவது , காலையில் எழுந்தவுடன் 'காபி' 'டீ' என்பதை மறந்து விடுங்கள். காலைக்கடனை முடித்துவிட்டு, சுத்தமான வடிகட்டிய தண்ணீரை வயிறு கொள்ளும் அளவு குடியுங்கள். கொதித்த நீர் வேண்டாம்.

காலை ஒன்பது மணியளவில் , கழியும் சிறு நீர், சிறப்புத் துர்நாற்றத்துடன் போதும். குடலில் உள்ள அசுத்தங்கள் பிரிவதைக் காண்பீர்கள். பிறகு உங்கள் பணிகளைத் தொடங்குங்கள்.

அசைவ உணவுகளை ஒதுக்கிவிடுங்கள் . பால் உணவும் கூடாது. பழங்களும் கூடாது.

பத்து மணிக்கு மேல , காலை உணவாக ஒரு சப்பாத்தி. வேண்டிய அளவு காய்கறிகள் வேகவைத்தவை. குறைவான உப்புடன் சாப்பிடுங்கள்.

மறு நாள் காலையில் முன் போலவே , தண்ணீர் குடியுங்கள். ஒன்பது மணியளவில் மீண்டும் தண்ணீர் குடியுங்கள். பின்னர் காய்கறி சப்பாத்தி உணவு உட்கொள்ளுங்கள்.

நாள் ஆக ஆக நீர் உணவை நண்பகல் , மாலை, இரவு வரை நீட்டித்துக் கொண்டே சென்று இறுதியில் நாள் முழுவதும் நீர் உணவையே உட்கொள்ளுங்கள்.

உங்கள் உடல் எடை குறைந்து கொண்டே வரும் . சில மாதங்களில் உங்களுக்கு உரிய எடை அளவு வந்ததும் எடை குறைவது நின்றுவிடும். அப்போது, உங்கள் உடல் தூய்மையாகிவிட்டது என்று பொருள் .

அதன் பின்னர் சிறுநீர் குறைவாகவே வெளியேறும் . தண்ணீர் குடிப்பதும் குறைவாகவே இருக்கும்.

உடம்பிலிருந்த நோய்கள் நீங்கிவிடும் . உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

நீர் உணவை உண்பவர்கள் எந்த பணியைச் செய்பவர்களாகவும் இருக்கலாம் . அவரவர் உழைப்புக்கு ஏற்ப உணவுகளை உண்ணலாம். பணி முடிந்ததும் நீர் உணவு முறைக்கு மாறிவிடலாம்.

இவ்வாறு நிர் உணவு முறைக்கு மாறினால் , அவர்களின் குடல் சுத்தமாக இருக்கும். நோய் அண்டாது. நீண்ட நாள் வாழலாம் என்பதையே, திருக்குறள் குறிப்பிடுகிறது.

இருக்கும் வரை தமிழ் அணையில்

அன்புடன்
இரவா

Tuesday, March 20, 2007

தமிழ் மருத்துவமும் தமிழ் மருத்துவ சுவடிகளும்

- முனைவர் இர.வாசுதேவன், M.A.,M.Phil.,Ph.D.

தமிழர் பண்பாடு அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு வகை ஒழுக்கங்களைக் கொண்டது. ஒழுக்கங்களுக்கு முதலாக இருப்பது, இன்பமாகும். மனித வாழ்வு இன்பமுடனிருக்க வேண்டும். உடல் நலமும் உள நலமும் செம்மையாகப் பேணப் பட வேண்டும் என்பதைக் கருத்திற் கொண்டு உருவானது, தமிழ் மருத்துவம்.

தமிழ் மருத்துவம் தொன்மையானது என்பதற்குச் சிந்துவெளி முத்திரைகள், தொல்காப்பியம், சங்க இலக்கியம், ஐம்பெருங் காப்பியம், திருக்குறள் பொன்றவை சான்றாக அமைந்துள்ள. அவற்றில், மருத்துவக் குறிப்புகளும், நோய் பற்றிய செய்திகளும், மருத்துவம் பற்றிய குறிப்புகளும், மூலிகைகளும் காணப்படுகின்றன.

சங்க காலத்தில் தோன்றிய மருத்துவத் தனி நூல் எதுவும் கிடைக்க வில்லை.என்றாலும், சங்க காலப் புலவரால் இயற்றப் பெற்ற ஆற்றுப்படை என்னும் மருத்துவ நூலின் ஒரு பகுதி கிடைத்துள்ளது. சங்க காலத்தில் மருத்துவ நூல்கள் தோன்றின என்பதற்குச் சான்றாகிறது. சங்க காலத்தில் ‘கலைக்கோட்டுத் தண்டார்’ என்னும் முனிவர் இருந்திருக்கிறார். அவர், ஒரு இலட்சம் பாடல்களைக் கொண்ட மருத்துவ நூலை இயற்றியிருக்கின்றார். அந்த சுவடி, ஜெர்மனி நாட்டிற்குச் சென்றிடுக்கிறது. அதன்பின்னால், ஜெர்மனி மருத்துவத் துறையில் முன்னிலைப் பெற்றுள்ளது! என்று, ஜெர்மனி நாட்டுத் தமிழரிஞர் கருத்து தெரிவிக்கிறார். ஆனால், அம்முனிவர் எழுதிய நூலின் ஒரு பகுதி கூட நமக்குக் கிடைக்கவில்லை.

கலைக்கோட்டு முனிவர் நூலைப் பார்த்து, பல நூல்கள் இயற்றினேன்! என்கிறார். போகர்.
அதைப்போல், நாடு கடந்து சென்ற சுவடிகள், 87 நாடுகளின் நூலகங்களில் இருக்கின்றன.
சிலப்பதிகாரத்தில் அரைப்பு முறையால் செய்யும் மருந்துகள் பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன. அவை,

சந்தான கரணி - முரிந்த உறுப்புகளை ஒட்டுவது.
சல்லிய கரணி - வேல் தைத்த புண்ணை ஆற்றுவது.
சமனிய கரணி - புண்ணின் தழும்பை மாற்றுவது.
மிருத சஞ்சீவினி - இறந்த உடலை உயிர்க்கச் செய்வது.

ஆனால், இம்மருந்துகளைப் பற்றிய குறிப்புகள், எந்த மருத்துவ நூலிலும் காணவில்லை.

தமிழ் மருத்துவ மரபைத் தோற்றுவித்தவர் திருமூலர். திருமூலர் இயற்றிய ‘எண்ணாயிரம்’ என்னும் நூல் கிடைத்தில. வடலூர் வள்ளலார், அந்நூல்லின் அருமை பெருமையை வியந்து போற்றுகிறார். எந்த நூலும் எண்ணாயிரத்துக்கு ஈடில்லை! என்கிறார். தருமையாபுர ஆதினத்தின் சுவடி நூலகத்தில் “எண்ணாயிரம்” நூல் இருந்ததைக் கண்டதாகவும், சில காலங்களுக்குப் பின்னர் அந்நூலைத் தேடிச் சென்ற போது, ஆங்கே அந்நூல் இல்லை! என்றும், தமிழ்த் தாத்தா உ.வே.சா குறிப்பெழுதியுள்ளார்.
எண்ணாயிரம் என்னும் நூல் ஒன்றே தமிழ் மருத்துவத்துக்கு மூல நூலாக இருந்திருக்க வேண்டும். அதன் சிறப்பினாலேயே அது காணாமற் போயிருக்க வேண்டும்.

முல்லை நிலத்துச் சித்தராகிய இடைக்காடர், அரியவகை மருந்துகளைக் கூறியுள்ளார். அச்செய்தி, உரையாசிரியர்கள் எடுத்தாண்டுள்ள மேற்கோள் களிலிருந்து கிடைக்கிறது. ஆனால், இடைக்காடர் இயற்றிய தனிநூல் ஒன்றையும் காணோம்.

அதேபோல்,
அகத்தியர் - 81000,
அகத்தியர் - 51000,
அகத்தியர் - 30000,
அகத்தியர் - 21000,
அகத்தியர் - 18000,
அகத்தியர் - 8000,
பரஞ்சோதி - 8000,
கோரக்கர் வெண்பா,
மச்சமுனி கலிப்பா,
சங்கர மாமுனி கிரந்தம்,
மாபுராணம்
போன்ற நூல்கள் தமிழ் மருத்துவத்துக்கு ஆதாரமாக இருந்துள்ளன. அவற்றிலிருந்து ஒரு சில பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன.

கி.பி. 7 ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி 17 ஆம் நூற்றாண்டு வரையிலான காலங்களில் ஒரு இலட்சம் பாடல்களைக் கொண்ட மருத்துவ நூல்கள் சமஸ்கிருதத்திற்கு மொழிக்கு மாற்றம் செய்யப் பட்டிருக்கின்றன. அவ்வாறே மங்கோலியம், திபெத்தியம், அரபி, தெலுங்கு, மராத்தி போன்ற மொழிகளுக்கும் சென்றுள்ளன. அவை, தமிழ் நூல்களாகவே வழங்கி வருகின்றன என்பது வருத்தத்துக்கு உரியது.

தமிழ் மருத்துவத்தின் ஒரு பிரிவாகிய வர்ம மருத்துவத்தின் மறு வடிவமாகியிருக்கிறது, சீன மருத்துவம்.

வடக்கிலுள்ள நாலந்தா பல்கலைக் கழகம், ஆயுர்வேத பல்கலைக் கழகம், சமஸ்கிருத கல்லூரிகள் ஆகியவற்றிலுள்ள உள்ள நூல்களில் செம்பாதி தமிழ் நூல்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்நூல்களை மொழிமாற்றம் செய்தவர்கள், தமிழ் மொழிப் புலமை யில்லாமல் செய்த பிழைகளை தேரையர் என்னும் சித்தர் கேளி செய்திருக்கிறார். இதிலிருந்து, மொழித்திருட்டு வெளிப்பட்டிருக்கிறது.
இலங்கை இராவனேஸ்வரன் நூலகத்திலிருந்து திருடி வரப்பெற்ற நூலைப் பார்த்து மருத்துவ நூல் இயற்றப்பெற்ற தாக, இரச சாஸ்திரம் என்னும் சமஸ்கிருத நூல் குறிப்பிடுகிறது.

தமிழ் மருத்துவ நூல்கள், செய்யுள் வடிவாக இருந்தாலும் அவை தமிழ் இலக்கிய வடிவங்களாகவே இருப்பது போற்றுதற்குரியது.

உதாரணமாக, வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, நொண்டி, சிந்து, கும்மி, பள்ளு, காவியம், காப்பியம், சிந்தாமணி, சூடாமணி, கல்லாடம், திருமந்திரம், சதகம், கரிசல், பிள்ளைத் தமிழ், உலா, பாரதம், நிகண்டு, திருப்புகழ், கோவை, தண்டகம், வாகடம், சூத்திரம், திறவுகோல், சுரிதகம் என்று பலவடிவங்களைக் குறிப்பிடலாம்.

தமிழ் மருத்துவச் சுவடிகளைத் திரட்டும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. அவற்றுள்,கீழ்க்கண்ட நிறுவனங்கள் தமிழ் மருத்துவச் சுவடிகளைத் திரட்டியுள்ளன.

தமிழ்ப் பல்கலைக் கழகம் - 5000
சரசுவதி மஹால் நூலகம் - 396
உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம் - 270
சித்த மருத்துவ மேம்பாட்டுக் குழு - 478
உஸ்மான் கமிட்டி - 594
உ.வே சாமிநாதர் நூலகம் - 15
விருத்தாசலம், வீர சைவ மடம் - 15
பாண்டிச் சேரி, பிரஞ்சு- இந்திய கலைக்கூடம் 80
மதுரை, தமிழ்ச் சங்கம் - 24
திருவனந்தபுரம் கீழ்த்திசை சுவடி நூலகம் - 165
சென்னை, கீழ்த்திசை சுவடி நூலகம் - 579

இவையல்லாமல், தமிழகத்திலுள்ள சைவ வைணவ மடாலயங்கள், கோயில்கள், மருத்துவ மனைகள், மருத்துவர்களிடம் நூற்றுக் கணக்கான சுவடிகள் இருக்கின்றன.

இத்தனைச் சுவடிகள் இருந்த போதிலும், தமிழ் மருத்துவம் நிறைவு பெற்ற மருத்துவ முறைகளைக் கொண்டதாகக் கூற முடியவில்லை. காரணம்,

(உ.வே.சா போன்ற) தமிழ்ச் சான்றோர்கள் தமிழ் நூல்களைத் திரட்டியது போல, மருத்துவ நூல்களைத் திரட்ட முன் வந்தது போல, மதுரை காமராஜர் பல்கலைப் பேராசிரியர்களும் மாணவர்களும் ஒன்று திரண்டு, தமிழகத்தின் இல்லங்கள் தோறும் சென்று சுவடிகளைக் கண்டறியும் பணியை மேற்கொண்டனர். அவர்கள், தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் சென்று சுவடிகள் பற்றிய கணக்கெடுப்பு நிகழ்த்திய போதில், பலரிடம் அரிய சுவடிகள் இருப்பதை அறிவிந்துள்ளார்கள். அவர்கள், சுமார் ஒன்பது இலட்சம் ஓலைச் சுவடிகளைக் கணக்கெடுத்துள்ளார்கள். அச்சுவடிகளில் தமிழ் மருத்துவத்தைத் தலை நிமிரச் செய்யும் அரிய முறைகளைக் கொண்ட நூல்கள் இருக்கக் கூடும்.
ஆனால், அவற்றைக் கையகப்படுத்த எந்த முயற்சியும் மேற்கொள்ளாதிருப்பது வருத்தத்திற்கு உரியதாக இருக்கிறது.

மூட்டையில் கட்டி மூலையில் வைத்தால் தங்கமே ஆனாலும் என்ன பயன்? ஆகவே,
தமிழ் மருத்துவம் சிறப்படைய வேண்டுமானால், கீழ்க்கண்ட செயல்கள் நடைபெற வேண்டும்.
கி.பி 1927 க்கு முன் சித்த மருத்துவம் என்னும் பெயர் வழங்கப்படவில்லை. மருத்துவம் என்றே வழங்கப்பட்டு வந்துள்ளது. ஆகவே, சித்த மருத்துவம் என்னும் பெயரை ‘தமிழ் மருத்துவம்’ என்று, வழங்க அரசாணை வெளியிட வேண்டும்.

தமிழ் மருத்துவத்தில் மூல மருந்தாகப் பயன் படுத்தப்பட்ட கற்பம், சரக்குகள், பாடாணங்கள், மூலிகைகள் ஆகியவற்றில் பல அடையாளம் காணப் படவில்லை.

மூலிகைகளைப் பாதுகாக்கும் பணியில் தமிழகத்து கோயில்களும் ஈடுபட்டிருக்கின்றன. கோயில்களில், ஸ்தல் விருட்சம் என்று கூறப்படுகின்ற கோயில் தாவரங்கள், அரியவகை மூலிகை இனமாகும். அவை நூற்றுக் கணக்கான ஆண்டுகள் முதிர்ந்த நிலையில் உள்ளன. அவை, பிற தாவர இனங்களின் பண்பிலிருந்து மாறுபட்டவை. (அவ்வாறு உள்ள 124 தாவரங்களை எனது ஆய்வேட்டில் பட்டியலிட்டுள்ளேன்) அவற்றை ஆராய்வது தமிழ் மருத்துவத்துக்கு உகந்ததாக இருக்கும்.
மூன்றே பொருளால் ஆனது அண்டம், பிண்டம், சீவன், வாதம், நோய், மருந்து என்பதன் உட்பொருள் ஆராயப்படவில்லை. முப்பு என்பதும் குரு மருந்து என்பது என்னவென்று தெரியவில்லை.

சுவடி வடிவத்திலிருந்து நூல்வடிவம் பெற்ற நூல்களில், பல, பொருள் விளங்காமல் செய்யுள் வடிவிலேயே இருக்கின்றன. பல நூல்கள் பிழையாகப் பதிப்பிக்கப் பட்டுள்ளன.

ஒரே நூல் வெவ்வேறு பெயரில் வெளியாகியுள்ளது. ஒரு நூலின் பகுதிகள் வேறு ஒரு நூலின் பகுதியாக அமைந்துள்ளது. இச்செயல்கள், தமிழ் மருத்துவ வளர்ச்சிக்கு ஏற்றதல்ல.

இந்தியாவில் ஆயுர் வேதக் கல்விக்காக மொத்தம் 196 பல்கலைக் கழகங்களும் கல்லூரிகளும் இருக்கின்றன என்பது வியப்பளிக்கிறது.

அயல் நாடுகளிலும் 6 கல்வி நிறுவனங்கள் இருக்கின்றன.

சித்த மருத்துவக் கல்லூரிகளாக இருப்பவை மொத்தம் - 12.
அவற்றில் தனியார் கல்லூரிகள் 10, அரசுக் கல்லூரிகள் 2.

இந்தியாவிலுள்ள ஆயுர்வேதப் பல்கலைக் கழகங்களும் கல்லூரிகளும் திரட்டிய மருத்துவ நூல்கள் அனைத்தையும் ஆராய வேண்டும். ஆங்குள்ள தமிழ் மருத்துவ நூல்களை அடையாளம் காண வேண்டும்.

அண்ணா சித்த மருத்துவக் கல்லூரி வெளியிட்டுள்ள ஆயுர் வேதம் - தமிழ் மொழி பெயர்ப்பு நூலை ஆராய வேண்டும். அதன் மூலம், தமிழ் மருத்துவ நூல்கள் ஆயுர்வேதமாக மாற்றப்பட்டுள்ள உண்மை வெளிவரும்.

தனியார் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள தமிழ் மருத்துவ நூல்களைத் திரட்டும் பணிக்குழு நியமிக்க வேண்டும். பதிப்பிலுள்ள நூல்களைத் தொகுக்க வேண்டும்.

வட மொழிக்கும் / ஆயுர் வேதத்துக்கும் இருப்பதைப் போல, தமிழ் மருத்துவத்துக்கு ஒரு பல்கலைக் கழகம் நிறுவ வேண்டும்.

தமிழ் மருத்துவ மாநாடுகள், கருத்தரங்குகள் நடைபெற வேண்டும். புதிய புதிய மருத்துவ முறைகளைக் கண்டறிய பரம்பரை மருத்துவர், குடும்ப முறை மருத்துவர் (பாட்டி வைத்தியம்) ஆகியோரை ஒருங்கிணைக்க வேண்டும்.

தமிழ் மருத்துவத்தில் மாட்டு வைத்தியம் சிறப்படைய வில்லை. ஆனால், சிறந்த மாட்டு மருத்துவர்கள் தமிழகத்தில் இருக்கின்றார்கள். அவர்களைக் கண்டறிந்து மருத்துவ முறைகளைத் திரட்ட வேண்டும். சரசுவது மஹாலில் நூற்றுக் கணக்கில் மாட்டுவாகட நூல்கள் இருக்கின்றன. ஆனால், அவை பதிப்பில் வெளிவர முயற்சி செய்ய வேண்டும்.

மலைவாழ் இன மக்களிடம் அரிய மருத்துவ முறைகள் நடைமுறையில் இருக்கின்றன. அவர்களிடமிருந்து அம்முறைகளைக் கற்க வேண்டும்.

ஆயிரக்கணக்கில் மருத்துவச் சுவடிகள் இருக்கின்றன. என்றாலும் அவை பதிப்பிக்கப் படாமல் சுவடியாகவே இருக்கின்றன. அவற்றைப் பதிப்பிக்க குழு அமைக்க வேண்டும்.

நிலம் கடந்து / நாடு கடந்து சென்ற சுவடிகளைக் கண்டறிந்து, அவற்றை மீட்டெடுக்க முயல வேண்டும்.

படைப்பாளர்கள் தங்கள் முயற்சியினால் படைக்கப் படுகின்ற நூல்கள், 50 ஆண்டுகள் நிறைவடைந்தால் அந்நூல்கள் பொதுச் சொத்தாகி விடுகின்றன. அதைப் போல, தனியாரிடம் உள்ள ஓலைச் சுவடிகள் அனைத்தும் அரசுச் சொத்து என அறிவிக்க வேண்டும். தங்களிடமிருக்கும் சுவடிகளை அரசிடம் ஒப்படைக்க வேண்டும். ஒப்படைக்காமல் இருப்பதும், அழிப்பதும், மறைப்பதும் குற்றமாக அறிவிக்க வேண்டும்.

சிறந்ததும் அரியதுமாகிய மருத்துவச் சுவடிகளையோ மருத்துவ முறைகளையோ அளிப்போர்களுக்கு ஏற்ற சன்மானம் அளிக்க வேண்டும்.

பிற துறைகளில் சிறந்தவர்களைச் சிறப்பு செய்வது போலத், தமிழ் மருத்துவத் துறையில் சிறந்தவர்களுக்கு ஆண்டு தோறும் விருது அளித்து சிறப்பு செய்ய வேண்டும்.

தமிழ் மருத்துவம் பயிலும் மருத்துவர்களுக்குச் சுவடிகளைப் படிக்கும் பயிற்சி அளிக்க வேண்டும்.
ஒவ்வொரு தமிழ் மருத்துவக் கல்லூரிகளிலும் தமிழ் மருத்துவ இலக்கியத் துறை நிறுவ வேண்டும். ஒவ்வொரு கல்லூரியும் சுவடிகளை ஆராய்தல், மருந்துகளை ஆராய்தல், நூல்களைப் பதிப்பித்தல் போன்ற பணிகளைச் செய்ய உத்தரவிட வேண்டும்.

தமிழகத்தின் இல்லங்களில் முடங்கிக் கிடக்கும் சுவடிகளைத் திரட்ட குழு அமைக்க வேண்டும். அறிவிப்புகள் வெளியிட வேண்டும். கிராம சுகாதார அதிகாரிகள், கிராம வருவாய்த்துறை அதிகாரிகள் பஞ்சாயத்து உறுப்பினர்கள் ஆகியோரைப் பயன் படுத்தி, சுவடிகளைத் திரட்டும் பணியை மேற்கொள்ள வேண்டும். திரட்டும் சுவடிகள் நூல்வடிவாகத் திட்டமிடல் வேண்டும்.
பதிப்பித்த நூல்களில் காணப்படும் மருத்துகளை ஆய்வு செய்து வெளியிட வேண்டும்.
மேற்கண்ட பணிகளை ஆற்றுகின்ற முனைப்பும் திறமும் நம்மிடம் இருக்கின்றன. வேண்டிய நிதி ஆதாரமும் ஊக்கமும் அளிக்க மத்திய மாநில அரசுகள் முன் வர வேண்டும்..

பொருப்பிலிருப்பவர்கள் உரிய பணிகளைச் செய்ய முன்வருவார்கள் என நம்புகின்றோம்.
வாழ்க தமிழ் மருத்துவம்.