Sunday, November 23, 2008

மறைபொருளில் மூலிகை மருத்துவம்


மறைபொருளில் மூலிகை மருத்துவம்

உயிர், உடல், உள்ளம் ஆகிய மூன்றும் பழுதின்றி இருத்தலே "நலம்' எனக் கொள்ளப்படுகிறது. இம்மூன்றனுள் ஏதேனும் ஒன்றில் சிறு பழுதேனும் ஏற்படுமாயின் அந்நிலை நோய் (அ) பிணி என்று வழங்கப்படுகிறது. உடற்பயிற்சி, காயகல்ப பயிற்சி, தியானம் ஆகியவை உடல், உயிர், உள்ளம் ஆகியவற்றை வலுப்படுத்துவதற்கான அதாவது, நோய் அணுகா வண்ணம் பாதுகாத்துக் கொள்வதற்கான சித்தர் எடுத்துரைத்த பயிற்சிகள் ஆகும். இவற்றை மேற்கொள்ளாது, வருகின்ற நோயை நீக்கும் முறையை மருத்துவம் என்கிறோம்.

முக்குற்றம் எனப்படும் வாதம், பித்தம், கபம் (வளி, தீ, நீர்) எனப்படும் நோய்களை வெயிலில் காய்தல், எண்ணெய் முழுக்கு, பட்டினியிருத்தல் (விரதம்), உணவு முறைகளை மாற்றியமைத்தல் போன்ற இயற்கையான எளிய முறைகளால் சித்தர்நெறியில் தீர்த்து வைத்தனர் நம் மூதாதையர். சற்று முற்றிய நோய்களைத் தாவரங்களின் பச்சிலை (இலை), தண்டு, பூ, காய், கனி, விதை, கிழங்கு, வேர், தோல், பட்டை முதலியவற்றைச் சாறு, தைலம், லேகியம், எண்ணெய், பொடி போன்ற மருந்துகளாகச் செய்து வழங்கி குணப்படுத்தினர்.

தாவரத்தை மருந்தாகப் பயன்படுத்தும் சில சித்த வைத்திய வழிகளை வீட்டுப் பெண்டிரும், வயதான மூதாட்டியரும் மற்றும் பலரும் நன்கு அறிந்திருந்ததனால் சித்த வைத்தியமானது சில வழிகளில் வீட்டு வைத்தியம், பாட்டி வைத்தியம், நாட்டு வைத்தியம் என்று பலவாறாக வழங்கப்படலாயிற்று. செவிவழி வந்த நாட்டுப்புறப் பாடல்களான தாலாட்டுகள் போன்றவற்றில் இருந்த பிள்ளை வைத்தியம், குடும்ப வைத்தியம் போன்றவை இன்று அருகி மறைந்து வருகிறது என்பது மிகவும் வருத்தத்திற்கு உரியதாகும்.

அன்றைய சித்த மருத்துவமான தமிழ் மருத்துவ மரபுகளில் அகத்திய மரபு, நந்திமரபு என இருந்திருக்க வேண்டும் என்று கருதுவர் மூலிகை மருத்துவ அறிஞர். அந்நாளில் வைத்தியர், சித்தர், யோகியர் என்று முப்பிரிவினர் மருத்துவத்தில் பங்கெடுத்தனர் என்று அறிகிறோம். மருத்துவ முறைகளைக் கற்றவர் வைத்தியர் என்றும், இவற்றோடு வாதவித்தைகளைச் செய்தவர் சித்தர் என்றும், இவற்றோடு யோகநெறிகள் கொண்டவர் யோகியர் என்றும் வழங்கப்பட்டனர்.

சித்தர்களின் எளிய பாடல்களில் பக்கவலி, கண்வலி, வயிற்று வலி, வயிற்றுப் போக்கு, கரப்பான் முதலிய நோய்களுக்கு மருந்து கூறும் முறையினைக் கண்டு மகிழ்கிறோம். அங்கே இலக்கியம் மருந்தறிவியலாக மலர்வது கண்டு மகிழ்ச்சி கொள்கிறோம். சிலவேளை மறைபொருள்களில் மருந்துகளைக் குறிப்பிடும் வழக்கமும் சித்தரிடம் உள்ளது. எடுத்துக்காட்டாக பாம்பாட்டிச் சித்தரின் பாடலொன்று

"தாசி வீடு சென்ற தறுதலைக்குச்
செம்மையாய் தருக செருப்படி தான்;
காசும் அற்றுவிடும்; கவ மிளகும்
கதியே சைவம் என்றாடு பாம்பே''

இப்பாடலின் மேற்போக்கான பொருள்: தாசி வீடு சென்ற தலைமகனைச் செம்மையாகச் செருப்பால் அடித்துத் தண்டிக்க வேண்டும். அவனால் காசு விரயமாகும். தன்மானமும் போய்விடும். ஆகவே, சைவ மார்க்கம் ஒன்றே கதியென்று ஆடாய் பாம்பே.

இப்பாடலின் மருத்துவப் பொருள்: தாசி வீடு சென்றதால் வந்த மேகவெட்டை எனும் பாலியல் நோய்க்குச் செருப்படி எனும் மூலிகை கொடுத்திட வேண்டும்; காசநோயும் கபநோயும் தணிய தாளிபத்தியம் (சைவம்) கொடுத்தால் நல்லது என்று ஆடு பாம்பே.

அத்திப் பிஞ்சு, கோவைப் பிஞ்சு, மாமரப் பட்டை, செருப்படி ஆகிய 4 மூலிகைகளையும் சம அளவில் எடுத்து வாழைப்பழச் சாறுவிட்டு, மைபோல் அரைத்து நெல்லிக்காய் அளவு சாப்பிட்டால் சீதபேதியும் ரத்த பேதியும் குணமாகும் என்ற மறை பொருளில் உள்ள தேரையர் பாடலொன்றைப் பார்க்கலாம்.


""ஆனைக் கன்றில் ஒருபிடியும் மறையன் விரோதி இளம்பிஞ்சும்
கானக் குதிரை புறத்தோலும் காலிற் பொடியை மாற்றினதும்
தாயைக் கொன்றான் சாறிட்டுத் தயவாய் அரைத்துக் கொள்வீரேல்
மானைப் பொருதும் விழியாளே! வடுகும் தமிழும் குணமாமே''

இப்பாடலில், ஆனைக்கன்று - அத்திப்பிஞ்சு; மறையன் விரோதி - கோவைப் பிஞ்சு; கானக் குதிரை - மாமரம்; காலில் பொடி - செருப்படி; தாயைக் கொன்றான் - வாழைப்பூ; வடுகு - சீதபேதி; தமிழ் - ரத்த பேதி.

சித்தர் குழூஉக்குறி முறையில் பல மருந்துப் பொருள்களுக்குப் பெயரிட்டு வழங்கினர். அவற்றுள் தாயைக் கொன்றான் என்பது ஒன்று.

"தாயைக் கொன்றானை உலர்த்தியே பொடிகள்
தான்செய்து சோறதி லிட்டாலும்
தாயகம் புரசம் பட்டையைக் கடாயம்
தான்வைத்துப் பருகிடில் தானும்
போயிடு மீளை''

என்கிறது "சரபேந்திர வைத்திய முறைகள்' எனும் நூல். வாழைப் பட்டையை உலர்த்திப் பொடி செய்து சோற்றுடன் கலந்து உண்டால், ஈளை நோய் நீங்கும்; அவ்வாறே புரசம் பட்டையைச் சிதைத்துக் கஷாயம் வைத்துப் பருகினாலும் ஈளை நோய் அகலும் என்கிறது இப்பாடல்.

"மண்ணில் வேந்தனை மாமலை யாட்டியை
உண்ணும் சோற்றுக்கு உறுதுணை யானவனைக்
கண்ணில் மூக்கில் காதில் பிழிந்திட
விண்ணுக்குச் சென்றஉயிர் மண்ணுக்கு மீளுமே''

என்ற பாடலும் மறைபொருளான மருத்துவப் பாடல்களில் ஒன்று. வெற்றிலை (மண்ணின் வேந்தன்), மிளகு (மாமலையாட்டி), உப்பு (உண்ணும் சோற்றுக்கு உறுதுணையானவன்) ஆகிய இம்மூன்றையும் கசக்கிக் கண்ணில், மூக்கில், காதில் பிழிந்திட எவ்வித பாம்பின் நஞ்சும் இறங்கும் என்பது இப்பாடலின் பொருள்.



தும்பிக்கையுடைய தந்திமுக விநாயகன் திருமேனியில் பூச் சொரிந்து அவனுடைய திருவடிகளைத் தவறாது பணிவோர்க்கு வாக்குவன்மை, மனநலம் உண்டாகும்; தாமரைச் செல்வியாம் திருமகளின் அருள்நோக்கு கிட்டும்; உடல் நலம் வாடாது வாடாது என்ற கருத்தினைத் தமது "வாக்குண்டாம்' என்ற நூலில்

"வாக்குண்டாம் நல்ல மணமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி றுடங்காது - பூக்கொண்டு
துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு''

என்று தும்பிக்கையான் துதியாக ஓதுகிறார் ஔவைப் பிராட்டியார்.

இதன் உட்கருத்தை உற்று நோக்கினால் பஞ்சபூத மூலிகைகளைப் பார்க்கலாம். தாமரை மலர் (பூ), குப்பைமேனி (மேனி), செருப்படை (தும்பி), கையான்தகரை (கையான் - கரிசலாங்கண்ணி), செருப்படை (பாதம்) ஆகிய ஐந்து மூலிகைகளைத் தவறாமல் சார்ந்திருப்போர்க்கு வாக்குவன்மை, மனநலம் கிட்டுவதோடு லட்சுமியின் கடாட்சமும் கிட்டும்; உடல் வாடாது, நரை திரை, மூப்பு அணுகாத இளமையுடன் என்றும் வாழலாம் என்ற அரிய பொருள் தருகிறது இப்பாடல்.

தாமரையின் 50% தாமிரச் சத்து, கரிசலாங்கண்ணியில் இரும்புச் சத்து, செருப்படையில் ஈயச்சத்து உள்ளன என்பது தாவரவியல் தரும் உண்மை.

முன்னாளில் திண்ணைப் பள்ளி, குருகுலம் போன்ற கல்விச் சாலைகளில் நாட்டு மருத்துவமும் ஒரு பாடமாக இருந்து வந்தது என்றும், பின்னர் அது உயர்நிலைப் பள்ளிகளிலும் ஒரு பாடமாக்கப்பட்டது என்றும் கூறுவர். ஒரு வருந்தத்தக்க செய்தி யாதெனில் அன்று பாடமாகச் சேர்க்கப்பட்ட சித்த வைத்தியமானது இன்று உயர்நிலைப் பள்ளியினின்றும் எடுக்கப்பட்டுவிட்டது என்பதே!

சித்தர் வழியில் நம் மூதாதையர் வகுத்த மருத்துவ நெறிகளானவை இன்று கையாளப்படாத காரணத்தினாலும், அவற்றிற்கான விளக்கங்களை எடுத்து இயம்புவோர் இல்லாமையாலும், அவற்றை ஆய்வு செய்து வெளியிட அறிஞர் பலர் முன் வராமையாலும், அவை நாட்பட நாட்படமறைந்து வருவதாலும், நோய் அணுகா நெறியை இன்றைய மக்கள் கடைப்பிடிக்காததாலும், இன்றைய நாள் பிணிகள் பல பெருகி வருகின்றன. ஏமக்குறைவு எனப்படும் எய்ட்ஸ் போன்ற புதுப்பிணிகள் உருவாகி வருகின்றன.

ஆங்கில மருத்துவத்திற்கு அடிக்கல் நாட்டியது நம் சித்த வைத்தியம் சர்ப்ப கந்தியிலிருந்து (கீச்த....) சர்பாசில்ப் (உதிர அழுத்த நோய்க்கான மருந்து), சோமவல்லியிலிருந்து எபிடிரின் (ஆஸ்த்துமாவிற்குத் தற்காலிகப் பயன்தரும் மருந்து), வள்ளிக் கிழங்கிலிருந்து கோர்ட்டிசோன் எனும் மயக்க மருந்து போன்ற பல அரிய மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.

"கீரைத்தோட்டம் என் மருந்துப் பொடி' என்பார் மருத்துவ அறிஞர் டால்ஸ்டாய் என்பவர். இது இலை வகிக்கும் தலைமைக்கு ஓர் எடுத்துக்காட்டு.

எனவே சித்தரின் மருத்துப் பாடல்களை, குறிப்பாக மறைபொருளில் இலங்கும் மருந்துகளை ஆய்வு செய்தால் பல உண்மைகள் தெரியவரும்; நன்மைகளும் ஏற்படும்.

Tuesday, April 8, 2008

தமிழ் மருத்துவ இலக்கிய ஆவணத்துறை & ஆய்வுத்துறை நிறுவுதல்

“தமிழில் மருத்துவ இலக்கியங்கள்” என்னும் புதிய வடிவங்களை, ஆய்வு செய்த வேளையில், “இந்திய மருத்துவ அறிவியல், கணிதம், வானவியல் போன்ற மரபுகளுக்கெல்லாம் ஆதாரமாகத், ‘தமிழ் மரபு’ விளங்குகின்றது! என்பதை நிறுவ கிடைக்கப்பெறும் ஆவணச் சான்றுகளைத் தங்கள் பார்வைக்குக் கொண்டுவர விழைகின்றேன்.

தமிழ் மருத்துவத்தின் வளர்ச்சி, தமிழ் மருத்துவத்தின் பாதுகாப்பு ஆகியவற்றுக்குரிய சிறப்பு நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன. தற்போதுள்ள தமிழ் மருத்துவத்தின் துறைப்பணிகளை விரிவுபடுத்த வேண்டும் என்பது எனது பரிந்துரையாகும்.

தமிழ் மருத்துவம், பண்டைய காலத்திலிருந்தே நடைமுறையில் இருந்து வந்துள்ளது. பழந்தமிழ் மருத்துவப் பாடல்கள் ஒரு சில கிடைத்தாலும் அதன் மருத்துவ நூல்கள் கிடைத்தில. சங்க காலத்து ‘கலைக்கோட்டுத் தண்டார்’ என்னும் முனிவர் இயற்றிய ஒரு இலட்சம் பாடல்களைக் கொண்ட நூல் இருந்ததற்கான சான்றும், அந்நூல் ஜெர்மனி நாட்டிற்குக் கொண்டு செல்லப் பட்டுள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு, தமிழ் மருத்துவச் சுவடிகளும் தமிழ் இலக்கியச் சுவடிகளும் சுமார் 87 நாடுகளின் நூலகங்களில் இருப்பதாக, உலக நாடுகளின் நூலக ஆய்வு தெரிவிக்கிறது.

மருத்துவ நூல் உரையாசிரியர்கள் மேற்கோளுக்காக எடுத்தாண்டுள்ள இடைக்காடர் மருத்துவம், அகத்தியர் - 81 000, அகத்தியர் – 51 000, அகத்தியர் 30 000, அகத்தியர் 21 000, அகத்தியர் 18 000, அகத்தியர் 8 000, பரஞ்சோதி 8 000, கோரக்கர் வெண்பா, மச்சமுனி கலிப்பா, சங்கரமுனி கிரந்தம், மாபுராணம் போன்றவை தமிழ் மருத்துவத்துக்கு ஆதாரமாக இருந்துள்ளன. இது, மேற்கோளுக்காகக் எடுத்துக் காட்டப்பட்டுள்ள பாடல்களினால் தெரியவருகிறது.

தமிழ் மருத்துவ மரபைத் தோற்றுவித்தவர் எனக் கருத்தப்பெறும் திருமூலர் இயற்றிய ‘எண்ணாயிரம்’ என்னும் நூலின் அருமையை வடலூர் வள்ளலார் போற்றுகிறார். தருமையாபுர ஆதினத்தின் சுவடி நூலகத்தில் ‘எண்ணாயிரம்’ என்னும் நூல் இருந்ததைக் கண்டதாக, உ.வே.சா. குறிப்பெழுதியுள்ளார்.

கி.பி. 7 ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 17 ஆம் நூற்றாண்டு வரையிலான காலங்களில் ஒரு இலட்சம் பாடல்களைக் கொண்ட மருத்துவ நூல்கள் சமஸ்கிருதத்திற்கும் மங்கோலியம், திபெத்தியம், அரபி, மலையாளம், தெலுங்கு, மராத்தி போன்ற மொழிகளுக்குச் சென்றுள்ளன. அவை, இன்றும் தமிழ் நூல்களாகவே வழங்கியும் வருகின்றன.

வடக்கிலுள்ள நாலந்தா பல்கலைக் கழகம், ஆயுர் வேத பல்கலைக் கழகம், சமஸ்கிருத கல்லூரிகள், கேரளாவில் வழங்கி வருகின்ற ஆயுர் வேத கல்லூரி ஆகியவற்றில் வழங்கி வருகின்ற மருத்துவ நூல்களில் செம்பாதி தமிழ் நூல்கள் என்பது குறிப்பிடத் தக்கது. வடமொழியிலுள்ள இரச சாஸ்திரம், இராவணன் நூலகத்திலிருந்து கொண்டு வரப்பெற்ற நூலைப் பார்த்து எழுதியதாகத் தெரிவிக்கிறது.

கி.பி. 10 ஆம் நூற்றாண்டளவில் குமரி, திருவனந்தபுரம் பகுதியில் வழங்கி வந்துள்ள ‘சிந்தாமணி மருத்துவம்’ என்னும் ‘இராவணன் மருத்துவ நூல்கள்’ அனைத்தும் திருவிதாங்கூர் மன்னரின் தூண்டுதலினால் திரட்டப் பட்டுள்ளன. அவை, நொய்யாற்றங்கரை என்னும் ஊரில் நிறுவப்பட்டிருந்த ‘தமிழ் மருத்துவ ஆய்வு மையம்’ என்னும் அமைப்பின் மருத்துவர்களும் வர்ம ஆசான்களும் அகத்தியர் பெயரில் மலையாள மொழியில் மொழிமாற்றம் செய்துள்ளனர்.

அந்நூல்களின் உதவியினால் உருவாக்கப் பட்டதே ‘ஆயுர் வேத மருத்துவம்’ ஆகும்.
இராவணன் இயற்றிய நூல்கள் என அறியப்பட்டுள்ள நூல்கள் விபரம் வருமாறு:-

1. உடற்கூறு நூல்
2. மலை வாகடம்
3. மாதர் மருத்துவம்
4. இராவணன் – 12000
5. நாடி, எண்வகை பரிசோதனை நூல்
6. இராவணன் வைத்திய சிந்தாமணி
7. இராவணன் மருந்துகள் - 12000
8. இராவணன் நோய் நிதானம் - 72 000
9. இராவணன் – கியாழங்கள் – 7000
10. இராவணன் வாலை வாகடம் – 40000
11. இராவணன் வர்ம ஆதி நூல்
12. வர்ம திறவுகோல் நூல்கள்
13. யாழ்பாணம் – மூலிகை அகராதி
14. யாழ்பாணன் – பொது அகராதி
15. பெரிய மாட்டு வாகடம்
16. நச்சு மருத்துவம்
17. அகால மரண நூல்
18. உடல் தொழில் நூல்
19. தத்துவ விளக்க நூல்
20. இராவணன் பொது மருத்துவம்
21. இராவணன் சுகாதார மருத்துவம்
22. இராவணன் திராவக தீநீர் நூல் – அர்க்க பிரகாசம்
23. இராவணன் அறுவை மருத்துவம் – 6000
24. இராவணன் பொருட்பண்பு நூல்
25. பாண்ட புதையல் முறைகள் – 600
26. இராவணன் வில்லை வாகடம்
27. இராவணன் மெழுகு வாகடம்

என்பன.

மேற்காணும் நூல்களில் பல, சங்கரன் கோயில் அருகிலுள்ள ‘கரிவலம் வந்த நல்லூர்’ என்னும் ஊரில் அமைந்துள்ள ‘பால் வண்ண நாதன்’ திருக்கோயிலில் கருவூலமாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இராவணன் நூல்களில் ஒன்றான “இராவணன் திராவக தீநீர்” என்னும் நூல், அர்க்க பிரகாசம் என்னும் பெயரில் மலையாளத்தில், சுமார் 180 ஆண்டுகளுக்கு முன் வெளியாகியிருக்கிறது. (அந்நூல் என்னிடம் இருக்கிறது)

“இருபதாம் நூற்றாண்டின் ஈழத்து சித்த மருத்துவம்” (திசம்பர் 2000)
ஆசிரியர். Dr. சே.சண்முகராஜா M.D. (Siddha)
சித்த மருத்துவ வளர்ச்சிக் கழகம்,
கந்தரோடை, சுன்னாகம், இலங்கை.

என்னும் நூல், சித்த மருத்துவத்தின் தாயகமாக இலங்கையில் யாழ்ப்பாணம் விளங்குகிறது என்றும், இராவணன் இயற்றிய நூல்கள் நமக்குக் கிடைக்கவில்லை என்றும், சிங்கள மொழியில், இராவணன் இயற்றிய நூல்களில் சில வழக்கில் இருந்து வருகிறது! என்றும் குறிப்பிடுகிறது. மேலும், 15 ஆம் நூற்றாண்டளவில் சிங்களத்தில் ஆக்கப்பட்ட “வைத்திய சிந்தாமணி பைசாஜ்ஜ சங்கிரகம்” (Vaidya Cintamani Bhaisadya Sangrahava) என்னும் சிங்கள மருத்துவ நூல், இராவணன் வைத்திய சிந்தாமணி என்னும் தமிழ் மருத்துவ நூலைத் தழுவி எழுதப்பட்டதாகும்! என்றும் குறிப்பிடுகிறது.

இந்தியில் “இராவண சம்ஹிதா” என்னும் மருத்துவ நூல் இராவணன் படத்துடன், மனோஷ் பப்ளிகேஷன், புதுதில்லி – 110084 லிருந்து வெளிவந்துள்ளது. அது, சுமார் 830 பக்கங்களைக் கொண்டதாக இருக்கிறது.

தமிழில் வழங்கி வந்துள்ள சங்க இலக்கியங்கள், காப்பியங்கள் போன்றவை உ.வே.சா. போன்றவர்களால் சேகரிக்கப் பட்டன. ஆனால், மருத்துவக் கலைநூல், 64 வகை கலை நூல்கள், நிகண்டு, வானியல், கணிதம், வர்ம நூல்களும் சேகரிக்கப் படவில்லை.
விலங்கு, பறவை மருத்துவம், மருத்துவம் சார்ந்த அறிவியல் சுவடி நூல்கள் திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகர்கோயில், திருவனந்தபுரம் அதனைச் சார்ந்த பகுதிகளிலும் மிகுதியாக இருக்கின்றன.

மைய அரசின் பண்பாட்டுத் துறையின் தேசிய ஓலைச் சுவடிகள் மையமும் தமிழ் நாடு அரசும் இணைந்து நட்த்திய கணக்கெடுப்பில் (பிப்ரவரி, 2006) நெல்லை மாவட்டத்தில் மட்டும் இரண்டு இலட்சம் சுவடிகள் இருப்பதாக்க் கண்டறியப்பட்டுள்ளது. சங்கரன் கோயில் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் முப்பதாயிரம் சுவடிகள் இருப்பதாக அறியப்பட்டுள்ளது.

இன்றைய நிலையில் தமிழ் மருத்துவ முறைகள் ஓலைகளிலும் பிற மொழிகளிலும் மறைந்து கிடக்கின்றன என்பது குறிப்பிடத் தக்கது.

தமிழ் மருத்துவம் சிறப்படையவும், தமிழ்க் களஞ்சியத்தை மீட்டெடுக்கவும் வேண்டும். அதற்குக் கீழ்க்காணும் பணிகளைச் செயலாக்க வேண்டும்.

1. தமிழகத்திலுள்ள தமிழ் மருத்துவச் சுவடிகளைத் திரட்டும் பணியை மேற்கொண்டு, அவற்றை ஆவணப் படுத்திப் பட்டியலிட வேண்டும்.
2. அரிய நூல்களைப் பதிப்பித்து உரையுடன் வெளியிட வேண்டும்.
3. தமிழகத்திலும் இலங்கையிலுமுள்ள இராவணன் நூல்களைத் திரட்டி வெளியிட வேண்டும்.
4. பிற மொழிகளிலும் பிற நாடுகளிலும் உள்ள மருத்துவ நூல்களைப் படியெடுக்க முயற்சி செய்ய வேண்டும்.
5. பரம்பரை மருத்துவர்களிடமுள்ள எழுத்து வடிவம் பெறாத மருத்துவ முறைகள், மலைசாதி வகுப்பினரிடமுள்ள மருத்துவ முறைகள் ஆகியவற்றைக் கண்டறிந்து திரட்ட வேண்டும்.

மேற்காணும் பணிகள் அனைத்தும் செம்மையாக நடைபெற, தமிழ் மொழிக்கு வலுவூட்ட “ தமிழ் மருத்துவ இலக்கிய ஆவணத்துறை & ஆய்வுத்துறை “ நிறுவிட வேண்டுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.